நவீன நகரங்கள் பட்டியலில் தேர்வு: அடுத்த கட்டத்துக்கு செல்லும் தஞ்சாவூர்!

Unknown | 1:30 AM | 0 comments

மத்திய அரசின் நவீன நகரங்கள் பட்டியலில் தேர்வு செய்யப்பட்டதையடுத்து, வளர்ச்சிப் பாதையின் அடுத்தக் கட்டத்தை நோக்கி தஞ்சாவூர் செல்லவுள்ளது. இதன் மூலம் எதிர்காலத்தில் மிகப்பெரிய சுற்றுலாத் தலமாக உருவெடுக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

உலக சுற்றுலாப் பயணிகளிடம் தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களில் தஞ்சாவூருக்கு முக்கிய இடமுண்டு. இதற்கு ராஜராஜசோழன் கட்டிய பெரிய கோயிலும், சரஸ்வதி மஹால் நூலகமும் முக்கிய காரணம் ஆகும். பல்வேறு சிறப்பும், பெருமையும் வாய்ந்த தஞ்சாவூர் நகரம் கடந்த ஆண்டு பிப்ரவரியில் நகராட்சியிலிருந்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது தஞ்சை மாநகராட்சியின் மக்கள்தொகை 2.2 லட்சம். இத்துடன் 11 ஊராட்சிகள், ஒரு பேரூராட்சி இணைக்கப்படவுள்ளது. அப்போது தஞ்சாவூர் மாநகரின் மக்கள்தொகை 3.48 லட்சம் இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இந்நிலையில்தான், தஞ்சாவூர் மாநகரம் மத்திய அரசின் நவீன நகரங்கள் பட்டியலில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் சேர்ந்துள்ளதால், மத்திய, மாநில அரசின் பங்களிப்புடன் வழங்கப்படும் நிதியின் மூலம் தஞ்சாவூர் மாநகரம் நவீன நகரமாக மாற்றம் பெறவுள்ளது.

என்னென்ன வசதிகள் கிடைக்கும்: நவீன நகரத் திட்டத்தின் நோக்கமே, நகர்ப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதும், பொருளாதாரத்தை வளர்ச்சி அடைய செய்வதுமே ஆகும்.

தஞ்சாவூர் மாநகரில் வசிக்கும் அனைவருக்கும் 100% பாதுகாக்கப்பட்ட குடிநீர், மின்சார வசதி கிடைக்கும். ஏழை மக்கள் குடியிருக்க தகுதியான வாழ்விடங்கள் ஏற்படுத்தித் தரப்படும். சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டு, போக்குவரத்தில் சீரான நிலை ஏற்படும். சாலையில் மிதிவண்டிக்கு தனிப்பாதை ஏற்படுத்தப்படும். சுற்றுச்சூழல் மாசடையாமல் பாதுகாக்கப்படும். மக்களுக்கான பொழுதுபோக்கு பூங்காக்கள் செம்மையாக பராமரிக்கப்படும். மக்கள் அனைத்து சேவைக் கட்டணங்களை செலுத்துவதும் மின்னணு முறையில் நடைபெறும் வசதிகள் ஏற்படுத்தப்படும். தொலைத்தொடர்புகள் நவீனப்படுத்தப்படும். இணையதள வசதிகள் மேம்படுத்தப்படும். நவீன கட்டடங்கள் கட்டப்படும். இதுபோன்ற இன்னும் பல வசதிகள் நவீன நகரம் திட்டத்தால் தஞ்சாவூருக்கு கிடைக்கும்.

திட்ட அமலாக்கத்துக்கு பின்னர், ஆண்டுக்கு பல லட்சம் சுற்றுலாப் பயணிகளை கவரும் சுற்றுலாத் தலமாக தஞ்சாவூர் உருவெடுக்கும்

Category:


உங்களுடைய படைப்புகள், ஆலோசனைகளை madukkurbayan@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்

0 comments